முதியவர் கழுத்தை நெரித்து கொலை மகன் உள்பட 2 பேர் கைது

போரிவிலியில் முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-28 23:08 GMT

மும்பை,

மும்பை போரிவிலி கோராய் பகுதியில் தனியாக வசித்து வந்த முதியவர் பீமா (வயது70). சம்பவத்தன்று அவரது வீட்டில் இருந்து சகிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. இதுபற்றி பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீமா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது உடல் போர்வைக்குள் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வெர்சோவாவில் வசித்து வரும் அவரது மகன் புருஷோத்தம் (46), தீபக் பாபர் என்ற ஆட்டோ டிரைவர் ஆகிய 2 பேர் பீமா வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் புருஷோத்தமை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரும், தீபக் பாபரும் சேர்ந்து பீமாவை கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

கொலை தொடர்பாக விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தனது மனைவிக்கும், ஆட்டோ டிரைவர் தீபக் பாபருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக கருதி பீமா தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்தார். பின்னர் அவர் மனைவியை பிரிந்து கோரோயில் தனியாக வசித்து வந்தார்.

அவரது மனைவி புருஷோத்தமுடன் வசித்து வருகிறார். அண்மையில் அந்த மூதாட்டி தனது மகன், பேரன் மற்றும் தீபக் பாபர் ஆகியோருடன் சென்று பீமாவை சந்தித்து பேசி உள்ளார். அப்போதும் மனைவியின் நடத்தை பற்றி பீமா இழிவாக பேசி சண்டையிட்டு உள்ளார். இது புருஷோத்தம் மற்றும் தீபக் பாபருக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

இதையடுத்து இருவரும் பீமாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.

பின்னர் மறுநாள் காலை இருவரும் பீமாவின் வீட்டிற்கு வந்து தனியாக இருந்த அவரை கழுத்தை நெரித்து கொன்றனர். உடலை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக போர்வையில் சுற்றி வைத்தனர். ஆனால் ஆள் நடமாட்டம் காரணமாக அப்போது உடலை வெளியில் எடுத்து செல்ல முடியவில்லை. மாலை 4 மணி வரையும் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாததால் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

பின்னர் அவர்கள் 2 நாட்கள் கழித்து மீண்டும் பீமாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதனால் பீமாவின் உடலை அப்புறப்படுத்தும் முடிவை கைவிட்டு விட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் தான் அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் புருஷோத்தமை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பாந்திராவில் பதுங்கி இருந்த தீபக் பாபரும் கைதானார்.

பின்னர் இருவரும் போரிவிலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வருகிற 1–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்