தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் 3 ஆயிரம் பேர் சீருடையில் கலந்து கொண்டனர்.

Update: 2018-01-28 22:15 GMT
வண்டலூர்,

நிவேதிதையின் 150-வது ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகர் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாழ்க வளமுடன் செயலாளரும், பட்டய கணக்காளர் அமைப்பின் காஞ்சீபுரம் மாவட்ட பொருளாளருமான கதிரேசன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை மாலை 4.25 மணிக்கு தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை மாநில தலைவர் கே.முத்துக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஸ்ரீநடேசன் பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் மண்ணிவாக்கம் சண்முகா நகர் 7-வது தெரு, 10-வது தெரு, 2-வது மெயின் சாலையில் சென்று முடிச்சூர் மெயின் ரோடு வழியாக மண்ணிவாக்கம் கூட்ரோடு வரை சென்று மீண்டும் ஸ்ரீநடேசன் பள்ளியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தின் போது ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் 3 ஆயிரம் பேரும் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, தலையில் கருப்பு தொப்பி போன்றவற்றை அணிந்து அனைவரும் ஒரே விதமாக சீருடையில் கலந்து கொண்டனர். மேலும் ஊர்வலத்தின் போது இசை வாத்தியங்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வாசித்தனர். இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் எச்.ராஜா, இல.கணேசன் எம்.பி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பா.பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சூரியநாராயணன் என்பவரை பற்றி எழுதப்பட்ட சமுதாய சிற்பி நூல் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை ஸ்ரீநடேசன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் டாக்டர். ந.ராமசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். இதில் இல.கணேசன் எம்.பி, எச்.ராஜா, நடிகர் விசு உள்பட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மண்ணிவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு எச்.ராஜா நிருபர்களிடம் பேசியதாவது-

தமிழகத்தில் இந்து ஒற்றுமை மிக மிக அவசியமாகி விட்டது. சங்க காலத்தில் இருந்து இந்த பூமி ஆன்மிக பூமியாக இருந்து கொண்டிருக்கிறது. இது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமி ஆகும். இங்கு ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்