ஆவடி ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

ஆவடி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர். எனவே அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-01-28 22:45 GMT
ஆவடி,

சென்னை சென்டிரல்-அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லிவாக்கம், கொரட்டூர், பட்டரவாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், அன்னனூர், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர், திருவள்ளூர், ஏகாட்டூர், கடம்பத்தூர், செஞ்சி மீனம்பாக்கம், மணவூர், திருவாலங்காடு, புளியமங்கலம், ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் ஆவடி ரெயில் நிலையத்திற்கு சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆவடி பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் ஆவடியில் மத்திய அரசின் ராணுவத்துக்கு சொந்தமான சி.ஆர்.பி.எப்., என்ஜின் பேக்டரி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையம், அன்னனூர் ரெயில்வே பணிமனை, இந்திய உணவு கழகம், தாசில்தார் அலுவலகம், ஆவடி நகராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதனால் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ- மாணவிகள், ராணுவ அதிகாரிகள் என பல ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்லும் முக்கிய இடமாக ஆவடி ரெயில் நிலையம் திகழ்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் 7 தண்டவாளங்கள் உள்ளன.

இங்குள்ள பஜாரில் காய்கனி மார்க்கெட், துணிக்கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு அனைத்து பொருட்களும் மலிவாக கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் இங்கு குவிகின்றனர்.

இப்படி பொருட்கள் வாங்க வருபவர்கள் பல ஆண்டுகளாக ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு தண்டவாளத்தை மோட்டார்சைக்கிள்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு ரெயில்களில் அடிபட்டு பலர் உயிர் இழக்கின்றனர்.

இங்குள்ள ரெயில் நிலைய நடை மேம்பாலத்தை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. இதனால் பொதுமக்கள் வசதிக்காக ஆவடி ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மட்டும் நடத்துகின்றனர். ஆனால் சுரங்கப்பாதை அமைப்பதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கொரட்டூர், நெமிலிச்சேரி ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டது போல் ஆவடி ரெயில் நிலையத்திலும் ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்