தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Update: 2018-01-28 23:00 GMT
பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குடியரசு தின விழா மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

நேற்று 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர். அவர்கள் ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, நடைபாதை, பஸ் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்ததால் மீன் கடைகளில் மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடைபெற்றது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பரிசலில் இளநீர் எடுத்துச் சென்று சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர், மீட்புக்குழுவினர் ஆகியோர் மணல் திட்டு, ஆலாம்பாடி பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மெயின் அருவி பகுதியிலும் தீவிரமாக கண்காணித்தனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்கவோ, பரிசல்கள் இயக்கவோ கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்