வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகை

வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி ஆலிவலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-28 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி ஊராட்சி கரும்பியூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தே.மு.தி.க. கிளை செயலாளர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இந்த நிலையில் கண்ணனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பேன்சி கடை வைத்திருந்த கருணாநிதியிடம், ஊர்வலத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தகராறில் ஈடுபட்டதாக ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் வர்த்தக சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் தங்களை ஜாதியை சொல்லி திட்டியதாக கூறி வர்த்தக சங்கத்தை சேர்ந்த 6 பேர் மீது சுரேந்தர், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆலத்தம்பாடி வணிகர்கள் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனை சந்தித்து ஆலத்தம்பாடி வர்த்தக சங்க தலைவர் கருணாநிதியிடம், சுரேந்தர் தகராறில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அளித்தனர். அதன்பேரில் ஆலிவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தபத்மநாதன் நேற்று இளவரசநல்லூரை சேர்ந்த பிரபு, கணேசன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை ஆலிவலம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறி அதனை கண்டித்து கரும்பியூர், ஆலத்தம்பாடி, ஐயூர், கொத்தங்குடி, இளவரசநல்லூர், பழையங்குடி சேர்ந்த கிராம மக்கள் வக்கீல் கார்த்தி தலைமையில் ஆலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட் டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் செந்தில்குமாரை போலீசார் விடுவித்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு அழைத்து சென்ற பிரபு, கணேசன் ஆகியோரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில், தே.மு.தி.க. வினர் ஆலிவலம் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்