காகித ஆலையில் குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது; பொதுமக்கள் சாலை மறியல்

புகளூர் காகித ஆலையில் குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-28 22:45 GMT
வேலாயுதம்பாளையம்,

கரூர் அருகே புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை உள்ளது. இந்த ஆலையில் தண்ணீர் தேவைக்காக ஆலை வளாகத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலையில் நேற்று முன்தினம் ஒரு இடத்தில் குளத்தின் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் குளத்தில் நிரம்பி அதன் கரை உடைந்தது.

அதன் மூலம் வெளியேறிய தண்ணீர் பக்காஸ் நுழைவுவாயில் தடுப்பு சுவர்களை உடைத்து கொண்டு கந்தசாமிபாளையம், வெட்டுக்காடு, செக்கன்காடு ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தது. இதில் ஆடுகள், டயர் வண்டிகள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. ஒரு சிலரது வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இது பற்றி கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் குழாய், குளம் உடைந்தது குறித்து தகவல் அறிந்த ஆலை நிர்வாக அதிகாரிகள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் தண்ணீர் வெளியே வருவது நின்றது. ஆலையில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் கலந்தது. மேலும் சில இடங் களில் தண்ணீர் தேங்கி நின்றது.

இந்த நிலையில் ஊருக்குள் புகுந்த தண்ணீரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நேற்று காலை பக்காஸ் நுழைவு வாயில் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காகித ஆலைக்கு வந்த லாரிகளை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.

பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதற்கிடையே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலை நிர்வாக தரப்பில் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் காகித ஆலை பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்