திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முதல் கட்டமாக வழங்கப்பட்டது.

Update: 2018-01-28 22:45 GMT
திருச்சி,

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை இல்லாமல் ஆக்குவதற்காக ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் புலிமண்டபசாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர்். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார்.

உலக சுகாதார நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 1,378 மையங்களிலும், திருச்சி மாநகராட்சி பகுதியில் 267 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 21 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 27 மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வருகிற மார்ச் மாதம் 11-ந்தேதி, பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோவில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையங்கள், திருச்சி ஜங்ஷன், டவுன், கோட்டை, ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் 69 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் திருச்சி வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்