2 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-01-28 23:00 GMT
2 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
நெல்லை,

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம்் 2 லட்சத்து 64 ஆயிரத்து 360 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. 2-வது தவணையாக மார்ச் மாதம் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

கிராமப்புற பகுதிகளில் 1,608 மையங்களிலும், நகர்ப்புறங்களிலும் 150 மையங்களிலும் அனைத்து பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும், இடம் பெயர்ந்து வேலை பார்க்கும்் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் 70 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் முகாம் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த பணியில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் 1,200 பணியாளர்களும், கல்வித்துறை சார்ந்த 305 நபர்களும், சத்துணவு பணியாளர்கள் 3 ஆயிரத்து 189 நபர்களும், ரோட்டரி குழுவைச் சார்ந்த 30 நபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 255 நபர்களும் ஆக மொத்தம் 6 ஆயிரத்து 979 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் கண்ணன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், குழந்தைகள் பிரிவு துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, குழந்தைகள் பிரிவு டாக்டர் ஆனந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மாநகர நல அலுவலர் பொற்செல்வன், தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்