மாநகரங்களில் மது கொண்டாட்டம்..

மகா நகரங்களின் இரவு வேளை வித்தியாசமானது. இயந்திர கதியான காலை நேர பரபரப்பில் இருந்து விடுபடும் மக்களில் ஒருபகுதியினரிடம் இரவு நேர உற்சாகம் பீறிடுகிறது.

Update: 2018-01-28 09:03 GMT
கா நகரங்களின் இரவு வேளை வித்தியாசமானது. இயந்திர கதியான காலை நேர பரபரப்பில் இருந்து விடுபடும் மக்களில் ஒருபகுதியினரிடம் இரவு நேர உற்சாகம் பீறிடுகிறது. இசை, பேச்சு, சிரிப்பு, நடனத்தோடு, கையில் பிடித்த மது கோப்பையுடன் அவர்களது பொழுது கதகதப்படைகிறது. நுரை ததும்பும் இந்த உற்சாக பொழுதுபோக்கில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற மாநகரங்கள் ஒன்றோடு ஒன்று வேறுபடுகிறது. மக்களின் கொண்டாட்டங்களும் இடத்துக்கு தக்கபடி மாறுபடுகிறது.

மும்பையில் சூடேற்றும் மையங்களாக திகழ்பவை அங்குள்ள ‘பப்’கள். தீப்பறக்கும் காக்டெயில், மோக்டெயில், நுரைவிடும் பீர் போன்றவைகளோடு கண்ணை பறிக்கும் வெளிச்சமும், துள்ளாட்டம் போடவைக்கும் இசையும் பப்களுக்கு மக்களை கவர்ந்திழுக்கிறது. இந்தி திரை உலகின் பிரபலங்களையும் அங்கே சந்திக்க முடியும். வேலையையும், வாழ்க்கையையும் எப்போதும் கொண்டாட்டத்தோடு அனுபவிக்கத் துடிக்கும் மும்பை மக்களை திருப்திப்படுத்த அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற பலவித பப்கள் உள்ளன. பணத்துக்கு தகுந்தபடி பல மாதிரியாக இருக்கின்றன. எல்லா தரப்பு மக்களையும் திருப்தி செய்வது அங்குள்ள பப்களின் விசேஷதன்மை.

டெல்லியில் இளமை நிரம்பிவழியும் கன்னாட் பிளேஸ் முதல் பல இடங்களில் பப் கலாசாரம் பரவிக்கிடக்கிறது. சாணக்யபுரி, கிரேட்டர் கைலாஷ், குருகிராம் போன்ற பல இடங்களில் பப்கள் ஏராளமாக இருக்கின்றன. தீராத இசையும், ஓயாத நடனமும், அலுக்காத மதுவும் அங்கெல்லாம் அலையடிக்கிறது. ஆனால் மும்பையோடு ஒப்பிட்டால் இங்கே பப் சுதந்திரம் குறைவு. சிலவிதமான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மக்களின் ஆவேச ஆசைகளுக்கு அவ்வப்போது கடிவாளம் போட்டுவிடுகிறது. ஆனாலும் பார்டென்டர்களின் சாகச வித்தைகளும், பார் டான்ஸ் நங்கைகளின் நடனமும், விதவிதமான மதுக் கோப்பைகளின் அணிவகுப்பும் டெல்லி மக்களுக்கு இரவு நேர இன்ப விருந்தை வழங்கத் தவறுவதில்லை.

சென்னை பழமையை பிரதிபலிக்கும் பெருநகரம். இங்கு பப் கலாசாரம் என்பது கிளப்களில் இருந்துதான் தொடங்கியது. மக்கள் தங்கள் ஓய்வு பொழுதை உற்சாகமாக செலவிட கிளப்களை பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவைகளும் வசதிபடைத்த மக்களுக்கான பொழுதுபோக்கிடமாகத்தான் முன்பு இருந்தது. 1990-ம் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரமிக்கத்தக்க வருகை, சென்னையை சர்வதேச அந்தஸ்துக்கு கொண்டு சென்றதும் இளமை பீறிட்டு, இங்கேயும் புதுமை பொங்கத் தொடங்கியது. தயக்கமும், கூச்சமும் எட்டிப்பார்க்க வார இறுதி நாள் பார்ட்டிகள் நடந்தன. இப்போது மற்ற மாநகரங்களோடு சென்னையும் பப் கலாசாரத்தில் போட்டிப்போடும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. தினமும் இங்கும் திருவிழாதான்!

பப் கலாசாரத்தில் மற்ற மாநகரங்களோடு போட்டி போடும் விஷயத்தில் பெங்களூரு தலைநிமிர்ந்து நிற்கிறது. அதனால் ‘பப் சிட்டி’ என்ற பெயரை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அங்கு வாடிக்கையாளர்கள் முன்பு வைத்தே ‘லைவ்’ ஆக பீர் தயாரித்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துகிறார்கள். இரவு தொடங்கி, எப்போது விடிகிறது என்று தெரியாத அளவுக்கு வாடிக்கையாளர்கள் கிறங்குகிறார்கள். பாட்டும், இசையும், நடனமும் மற்ற நகரங்களிலிருந்து பெங்களூருவை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. தகவல் தொழில்நுட்ப நகரமான அங்கு நூற்றுக்கணக்கில் பப்கள் உள்ளன.

புது வருட தொடக்கத்தில் டெல்லி பப்பில் இருந்து பயமுறுத்தும் செய்தி வெளிவந்தது. கிரேட்டர் கைலாஷ் பப்பில் அதிகாலை கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, குண்டு வெடித்து ஒருவர் காயமடைந்தார். அதை தொடர்ந்து எல்லா பப் களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் உருவானது. குருகிராமில் உள்ள பப்பில் திரவ நைட்ரஜன் கலந்த காக்டெயில் அருந்தியவர்களின் இரைப்பையில் ஓட்டைவிழுந்து, குடலிலும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு திரவ நைட்ரஜன் கலந்த பானங்களும், உணவு களும் தடை செய்யப்பட்டது. இந்த தடையை அரியானா அரசும் கடுமையாக நடைமுறைப்படுத்துகிறது.

பப்கள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை கவர ‘பார் சாகசங்களை’ நடத்துகிறது. மதுவை பயன்படுத்தி தீக்காட்சிகளை நடத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள். அதற்கு ‘பயர் பிளாரிங்’ என்று பெயர். சகஜமாக இந்த காட்சிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மும்பை கமலா மில்ஸ் பப்பில் விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த மாதிரியான சாகசங்களுக்கு போலீஸ் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதற்கென்று அனுமதி பெறவேண்டும் என்றும், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கும்போது அத்தகைய சாகசங்களை நடத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள பப்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவிதங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் அத்தகைய பாதுகாப்புகள் குறைவு. பிரச்சினைகளும் குறைவு.

டெல்லியில் பப் மற்றும் பார்கள் இரவு 12.30 மணி வரை இயங்கலாம். வார இறுதி நாட்களில் 1.30 மணி வரை இயங்கும். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பப்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்கிறார்கள். அங்கு தங்களுக்கென்று தனி டி.ஜெ.க்களை நியமனம் செய்து வைத்திருக்கிறார்கள். விசேஷ நாட்களில் பிரபலமான டி.ஜெ.க் களும், தனித்துவமான இசைக்குழுக்களும் அங்கே நிகழ்ச்சிகளை நடத்தி வாடிக்கையாளர்களை கவர்கின்றன. பெரும்பாலான பப்களில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆண், பெண்களை ஜோடியாகத்தான் அனுமதிக்கிறார்கள். ஜோடியாக மூவாயிரம் ரூபாய் என்றால், தனியாக செல்லும் நபருக்கு 2500 ரூபாய் வசூலித்துவிடுகிறார்கள். தனியாக வருகிறவர்கள் பிரச்சினைக்குரியவர்கள் என்ற எண்ணம் பப் நிர்வாகி களுக்கு இருக்கிறது. அதனால் அப்படிப்பட்டவர்களை தவிர்க்கவே, ‘ஜோடியாக வரவேண்டும் என்றும் ‘டிரஸ் கோட்’ கடைப்பிடிக்கவேண்டும் என்றும்’ கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். எல்லா பப்களிலும் பாதுகாப்புக்காக திடகாத்திரமான பவுன்சர்களை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவர்களது கடுமையான பரிசோதனைக்கு பிறகே வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைய முடியும். உள்ளே போட்டோ எடுக்கவும் அனுமதி மறுக்கப் படுகிறது. உள்ளே வரும் வாடிக்கையாளர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க படாதபாடுபடுகிறார்கள்.

சென்னையில் 2001-ம் ஆண்டில் முதல் பப் திறக்கப்பட்டது. தற்போது ஐம்பதிற்கும் அதிகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களே முக்கியமான வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இங்கு ஏராளமான வெளிநாட்டினரும் வசித்து வருகிறார்கள். அவர்களும் பப் கலாசாரத்தை வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முன்பு இங்குள்ள பப்களின் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. இப்போது போட்டிபோட்டு சலுகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை கவர்கிறார்கள். இங்கு மது இல்லாத பப்களும் உள்ளன. அங்கு இசையும், நடனமும், உணவும் கிடைக்கிறது.

மும்பை பப்களில் சனிக்கிழமை இரவு வாடிக்கையாளர்கள் குவிகிறார்கள். இரவு ஒரு மணி வரைதான் பப்கள் இயங்கவேண்டும். ஆனால் போலீசாரை சரிசெய்து அதிகாலை 4 மணி வரைகூட சில பப்கள் இயங்குகின்றன. விடிந்தது தெரியாத அளவுக்கு விழுந்தடித்து கொண்டாடுகிறார்கள். வசதி படைத்த வாடிக்கையாளர்கள் சிலர் ஒரே இரவில் அடுத்தடுத்த பப்களுக்கும் சென்று ஆட்டம் போடுகிறார்கள். காதல் ஜோடிகளுக்கு இலவச அனுமதியும் கிடைக்கிறது. அருந்தும் மதுவுக்கு மட்டும் பணம் பெறுகிறார்கள்.

பொதுவாக பப்கள் என்றாலே பிரச்சினைக்குரிய இடம் என்ற கருத்து நிலவுகிறது. பவுன்சர்கள் இருந்தாலும் மது அருந்தும் இடம் என்பதால் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் முளைத்துவிடுகின்றன. அதனால் பிரபலமான ஓட்டல்களில் இயங்கும் பப்களை சத்தமில்லாமல் மூடவும் செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்