தனிமையில் தவித்த மகன்-தந்தையின் பாச போராட்டம்

ஜப்பானைச் சேர்ந்த 7 வயது சிறுவன் யமடோ டானூகா, 6 நாட்களுக்குப் பிறகு அடர்ந்த காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டிருக்கிறான்.

Update: 2018-01-28 07:30 GMT
ப்பானைச் சேர்ந்த 7 வயது சிறுவன் யமடோ டானூகா, 6 நாட்களுக்குப் பிறகு அடர்ந்த காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டிருக்கிறான். வழி தவறி காட்டிற்குள் சென்றுவிட்டானோ என்று யோசிக்கிறீர்களா..?, உண்மை அதுவல்ல. அவனது பெற்றோரே இதற்கு காரண மாகிவிட்டனர்.

யமடோ, குறும்புகார சிறுவன். வீட்டிலும், பள்ளியிலும் படுபயங்கரமாக சேட்டை செய்வானாம். அதோடு காரில் சுற்றுலா செல்கையில் யமடோவின் சேட்டை இருமடங்காகிவிடுமாம். அன்றும் அப்படிதான். வீட்டில் இருந்து பக்கத்து ஊருக்கு காரில் சென்று திரும்பும்போது யமடோவின் சேட்டை அதிகமாகியிருக்கிறது. அதை யமடோவிற்கு உணர்த்தும் வகையில் அவனது தந்தை ஒருசெயலில் இறங்கியிருக்கிறார்.

காட்டு வழி பாதையில் கார் பயணித்து கொண்டிருக்கையில், ‘‘சேட்டை செய்தால் நடுகாட்டிற்குள் இறக்கிவிடுவேன்’’ என்று தந்தை விளையாட்டாக மிரட்டியும், யமடோவின் சேட்டை குறையவில்லை. அதனால் விளையாட்டாக மகனை காரில் இருந்து இறக்கிவிட்டு, சிறிது தூரம் சென்றிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே மகனை இறக்கிவிட்ட இடத்திற்கு வந்துபார்த்தால், அங்கு யமடோ இல்லை. பதறியப்படி மகனை தேடி காட்டுக்குள் சென்றிருக்கிறார். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் அலைந்து திரிந்தும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. அடர்ந்த காட்டுக்குள் சென்ற மகன் என்ன ஆனானோ? என பதறி போனவர், வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அடர்ந்த மரங்கள், கடுமையான குளிர், கரடி போன்ற விலங்குகள் வசிக்கும் காட்டில் ஒரு சிறுவன் தனியாக மாட்டிக்கொண்டதை கேள்விப்பட்டு ஜப்பான் மீடியாக்கள் கொந்தளித்தன. அதனால் போலீசை ஓரங்கட்டிவிட்டு, 180 ராணுவ வீரர்களை களமிறக்கினார்கள். தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் சிறுவனை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆறாவது நாள் கழித்து சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். எங்கு தெரியுமா? ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாருமற்ற ஓர் அறையில் தனிமையில் தவித்திருக்கிறான். அங்கு எதேச்சையாக சென்ற ராணுவ வீரரைப் பார்த்தவுடன் தண்ணீரும் ரொட்டியும் சாப்பிடக் கொடுக்கும்படிக் கேட்டிருக்கிறான், யமடோ. ஆரோக்கியமாக வளர்ந்த சிறுவன் என்பதால் 6 நாட்கள் உணவின்றி இருந்திருக்கிறான். உணவு கொடுத்த வுடன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் யமடோ. ‘‘குழந்தையைத் திருத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரியத்தில் இறங்கியது நான் செய்த பெரும் தவறு. என் குழந்தை இந்த ஆறு நாட்களில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். என்னால் இந்த வலியை எப்போதும் மறக்க முடியாது. எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி’’ என்று யமடோவின் தந்தை கண்ணீர் விட, சேட்டைக்கார பையனும் தந்தையிடம் மன்னிப்பு கேட்டான். இருவரின் பாச போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

‘‘தந்தையை பயமுறுத்தவே காட்டிற்குள் நுழைந்தேன். அடர்ந்த காடு என்பதால், நினைத்தபடி வெளியே வரமுடியவில்லை. எல்லா திசையும் ஒரே மாதிரி இருந்ததால்... எங்கு இருக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் பயந்துவிட்டேன். கடைசியில் யாருமில்லாத அறையில் அமைதியாக அமர்ந்துவிட்டேன். நான் தொலைந்துபோனதை நினைத்து அழுததை விட, தந்தை யிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஏங்கியதே அதிகம்’’ என்கிறான் தான் செய்த தவறை உணர்ந்த யமடோ.

மேலும் செய்திகள்