குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கிராம பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-28 00:12 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகளில் அள்ளப்பட்டு, 15 கிலோ மீட்டர் தொலைவில் பெரியசிறுவத்தூர் கிராமத்தில் உள்ள பொது இடத்தில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி பெரிய சிறுவத்தூர், லட்சியம், வரதப்பனூர், தென்தொரசலூர் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த நவம்பர் மாதம் குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மல்லிகா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கிராம மக்களை வரவழைத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதனால் பெரிய சிறுவத்தூரில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் இருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டு 2 குப்பை லாரிகள் லட்சியம் கிராமம் வழியாக பெரியசிறுவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதுபற்றி அறிந்த லட்சியம், பெரியசிறுவத்தூர், வரதப்பனூர், தென்தொரசலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் லட்சியம் கிராம எல்லைக்கு திரண்டு வந்து குப்பை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில், குப்பைகளை கொட்டாமல் 2 லாரிகளுடன் அதன் டிரைவர்கள் அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கே திரும்பி வந்து விட்டனர். இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்