ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு ரெயில்கள் இயக்க வேண்டும், எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை, திருச்சி ரெயில்வே கோட்டங்களுக்கான எம்.பி.க்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Update: 2018-01-28 00:10 GMT
மதுரை,

தென்னக ரெயில்வேயின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களுக்கான எம்.பி.க்களின் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்சிரஸ்தா தலைமை தாங்கினார். மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொல்லம் எம்.பி. பிரேம்சந்திரன், இடமன்-நியூஆரியங்காவு இடையே அகல ரெயில்பாதை பணிகளை விரைவில் முடித்து, மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய ரெயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தினார். மதுரை எம்.பி. கோபால கிருஷ்ணன், ஆதர்ஷ் ரெயில் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூடல்நகர் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜா, சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் ஆகியோர் ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு ரெயில்கள் இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்றனர்.

பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன், உடுமலைபேட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். தேனி எம்.பி. பார்த்திபன், திண்டுக்கல்- சபரிமலை இடையே ரெயில்கள் இயக்குவதற்கான ஆய்வுப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம் எம்.பி. கோபால் பேசும்போது, திருவாரூர்-காரைக்குடி இடையேயான அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்