கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் கைது

பெங்களூருவில் கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2018-01-28 00:01 GMT

பெங்களூரு,

பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்தில் நேற்று மேற்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் அனுஜித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெங்களூருவில் இரவில் தனியாக செல்பவர்களை வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வந்த 5 பேரை பேடராயனபுரா போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ஜே.ஜே.ஆர். நகரை சேர்ந்த சுகேப் பாஷா (வயது 19), ஜூபைர் பாஷா (19), முகமது அப்ரித் (19), சையத் சமீர் (19), முகமது உமர் (19) என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் போலீசில் சிக்கியதன் மூலம் 18 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதேபோல் பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து வந்ததாக பெங்களூரு காவேரிபுராவை சேர்ந்த சஞ்சய் (23), தொட்டபஸ்தியை சேர்ந்த சந்தோஷ் (24), விஜயநகரை சேர்ந்த பிரமோத் (27), கல்யாண்நகரை சேர்ந்த அசோக் (19), அர்ஜூன் (22) ஆகியோரை அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 35 கிராம் தங்க நகைகள், கைக்கெடிகாரம், ஒரு செல்போன் என ரூ.5 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம், 5 கொள்ளை வழக்குகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக பனசங்கரியை சேர்ந்த ரகுகவுடா (30), பாஸ்கர் (36) ஆகியோரை அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 100 கிராம் தங்க நகைள், ஒரு மோட்டார் சைக்கிள் என மொத்தம் ரூ.4 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் 2 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், பெங்களூருவில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக கொட்டிகெரேயை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை கெங்கேரி போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் 15 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான மணிகண்டனிடம் இருந்து 500 கிராம் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் என ரூ.16.60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டு, கொள்ளை என வழக்குகளில் தொடர்பு கொண்டதாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதோடு, மொத்தம் 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்