போலீசார் தன்னை வேவு பார்த்ததாக எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

போலீசார் தன்னை வேவு பார்த்ததாக கவர்னரிடம் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் புகார் அளித்தார்.

Update: 2018-01-27 23:33 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கடந்த வியாழக்கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மும்பை போலீசின் சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் 2 பேர் சாதாரண உடையில் வந்து, ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் பத்திரிகையாளர் சந்திப்பை வேவு பார்த்ததாக கூறப்படுகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கோரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு கொடுத்து உள்ளார். பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், “நான் மும்பை போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து, உங்கள் அனுமதியில்லாமல் எப்படி எனது வீட்டிற்குள் போலீசார் நுழைய முடியும் என கேட்டேன். இது எதிர்க்கட்சி தலைவர்களை வேவு பார்க்கும் நடவடிக்கையை தவிர வேறொன்றும் இல்லை. அரசின் அனுமதி இல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்குள் நுழையும் துணிவு எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இருக்காது” என்றார்.

மேலும் செய்திகள்