ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மைதான பராமரிப்புக்காக குடிநீரை பயன்படுத்த கூடாது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மைதான பராமரிப்புக்காக குடிநீரை பயன்படுத்த கூடாது என மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-01-27 23:28 GMT

மும்பை,

மராட்டியத்தில் 2016–ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியபோது, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு, மும்பை மாநகராட்சியிடம் இருந்து தண்ணீர் வாங்கி மைதான பராமரிப்புக்கும், கழிவறை போன்ற மற்ற வசதிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வறட்சி நிலவும் நேரத்தில் ஐ.பி.எல். போட்டிக்கு குடிநீரை செலவழிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அப்போது மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி நடத்த முடியாமல் போனது.

இந்த வருட ஐ.பி.எல். போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஓகா மற்றும் தேஷ்முக் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநகராட்சி வினியோகிக்கும் குடிநீரை மைதான பராமரிப்புக்கு பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டனர்.

இதையடுத்து மழைநீர் சேமிப்பு மூலம் கிடைத்த தண்ணீரை மட்டுமே இந்த ஆண்டு ஐ.பி.எல். விளையாட்டு போட்டிக்கு பயன்படுத்தப்போவதாக மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். விளையாட்டின் போது நாள் ஒன்றுக்கு மைதான பராமரிப்பு, குடிநீர் மற்றும் கழிவறை பயன்பாட்டுக்காக 3 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்