மும்பையில் கடந்த ஆண்டு ரெயில் விபத்துகளில் சிக்கி 3,014 பேர் பலி

மும்பையில் கடந்த ஆண்டு ரெயில் விபத்துகளில் சிக்கி 3,014 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.;

Update:2018-01-28 04:24 IST

மும்பை,

மும்பையில் மேற்கு மற்றும் மத்திய ரெயில்வேக்கள் சார்பில் மின்சார ரெயில் மற்றும் நீண்ட தூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்கும் இந்த ரெயில் சேவைகள் தினசரி உயிர் பலிகளையும் வாங்கி வருகின்றன. தினசரி ரெயில் விபத்துகளில் சிக்கி 9 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ரெயில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் விவரங்களை மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சமீர் ஜவேரி என்பவர் ரெயில்வே போலீசில் கேட்டிருந்தார்.

அதற்கு ரெயில்வே போலீஸ் அளித்து உள்ள பதில் விவரம் வருமாறு:–

கடந்த ஆண்டு ரெயில் விபத்துகளில் சிக்கி மொத்தம் 3 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக இவர்களில் 1,651 பேர் தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் அடிபட்டு பலியானவர்கள் ஆவர். இதில் 1,461 பேர் ஆண்கள், 184 பேர் பெண்கள்.

இதேபோல 58 பெண்கள் உள்பட 654 பேர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து உள்ளனர்.

அதிகபட்சமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 1,534 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்