கனகனேரியில் மீண்டும் கவர்னர் ஆய்வு

கனகனேரியில் நடைபெறும் பணிகளை கவர்னர் கிரண்பெடி மீண்டும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் பணிகள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏரி அர்ப்பணிக்கப்பட உள்ளது.;

Update: 2018-01-27 23:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் இருக்கும்போது வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பெடி சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். இதன்மூலம் துப்புரவு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வந்தார். ஏரிகளை பார்வையிட்டு அதனை பராமரிக்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்தநிலையில் கதிர்காமத்தில் உள்ள கனகனேரியை பார்வையிட்டு தூய்மைப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். வார இறுதி நாட்களில் அவ்வப்போது கனகனேரிக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.அப்போது கண்டறியப்படும் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கும் உத்தரவிடுகிறார்.

அதன்படி நேற்று கனகனேரியில் மீண்டும் ஆய்வு செய்தார். அங்கு நடைபாதை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கவர்னரின் கூடுதல் செயலாளர் ஸ்ரீநிவாஸ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, சுற்றுலா துறை இயக்குனர் முனுசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கனகனேரியில் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் தனியார் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை செய்து தர உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை தனியார் வங்கி, மின் விளக்கு வசதிகளை சுற்றுலாத்துறை, அரசு மருத்துவக்கல்லூரி, இருக்கை வசதிகளை அப்பகுதி குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினரும் செய்து தர முன்வந்துள்ளனர்.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் இந்த ஏரி முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதற்காக பாடுபட்ட அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கவர்னர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.

மேலும் செய்திகள்