எருது விடும் விழா பாதியில் தடுத்து நிறுத்தம் காளைகள் முட்டி 20 வாலிபர்கள் காயம்

பாலக்கோடு அருகே சாமனூரில் எருது விடும் விழா பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. காளைகள் முட்டி 20 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2018-01-27 22:45 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டத்தில் எருதாட்டம் மற்றும் எருது விடும் விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். பாலக்கோடு அருகே சாமனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. கிராமமக்கள் ஒன்றிணைந்து எருது விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகளுக்கு பூஜை செய்து தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

இதனையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கட்டு அவிழ்த்து விடப்பட்டு துள்ளி குதித்து ஓடிய காளைகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இளைஞர்களின் கையில் சிக்காமல் போக்குகாட்டி காளைகள் சீறிபாய்ந்து ஓடின. அவ்வாறு சீறி பாய்ந்து ஓடிய காளைகளை அடக்க முயன்ற வாலிபர்களை முட்டி தள்ளியது. இதில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து காயமடைந்த வாலிபர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த எருது விடும் விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை. மேலும் நிர்ணயிக்கப்பட்ட காளைகளைவிட கூடுதலாக ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன.

இதனால் விழாக்குழுவினரால் மக்கள் கூட்டம் மற்றும் காளைகள் கொண்டு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் போதிய பாதுகாப்பு வசதியும் இல்லை. இதனால் பொதுமக்களின் நலன் கருதி தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி எருது விடும் விழாவை தொடர்ந்து நடத்த கூடாது என கூறி பாதியில் தடுத்து நிறுத்தினார். மாலை 3 மணி வரை நடைபெற இருந்த எருது விடும் விழா பகல் 12 மணிக்கே பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

மேலும் செய்திகள்