30-ந் தேதி தேரோட்டம் தயார் நிலையில் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் தேர்கள்

திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக 5 தேர்களும் தயார் நிலையில் உள்ளன.

Update: 2018-01-27 22:30 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றி 4 வீதிகளிலும் சிவன் கோவில்கள் உள்ளன. ஆகவே இந்த தலத்தை பஞ்சலிங்க தலமாக கருதுகிறார்கள். காசிக்கு நிகரான தலமான இங்கு, சந்திரன் வழிபட்டு வரம் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இங்கு மகாலிங்கசாமி, பிரகத்சுந்தரகுஜாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. தைப்பூச திருவிழா தேரோட்டம் 70 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் தேர் திருப்பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கடந்த 14-ந் தேதி தைப்பூச திருவிழா விநாயகர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி அறுபத்து மூவர் வீதியுலாவும், 22-ந் தேதி மகாலிங்கசாமி கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. இதில் வலம் வர உள்ள 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விழா நிறைவாக வருகிற 31-ந் தேதி தைப்பூசத்தையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்