சோளிங்கர் கோவிலில் குரங்கு கடித்து சிறுவன் படுகாயம்

சோளிங்கர் கோவிலில் குரங்கு கடித்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.;

Update: 2018-01-27 23:00 GMT
சோளிங்கர்,

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். 1,305 படிக்கட்டுகளை கொண்ட பெரியமலையில் யோக நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல் அதனருகில் 406 படிக்கட்டுகளை கொண்ட சிறியமலையில் யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இந்த கோவில்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இரு மலைகளில் மலையேறும் படிக்கட்டு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கொண்டு செல்லும் பிரசாத பொருட்கள், பழங்கள், கைப்பை, செல்போன், பெண்கள் தலையில் வைக்கும் பூக்களையும் பிடுங்கி சென்று அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை பெங்களூரு விவேக் நகரை சேர்ந்த வைரவன் என்பவர் குடும்பத்துடன் பெரிய மலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டு பகுதிகளில் இருந்த ஒரு குரங்கு வைரவனின் மகன் விஷாலை (வயது 9) விரட்டி கடித்தது. இதில் விஷாலுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

உடனடியாக உறவினர்கள் விஷாலை மலையின் கீழே அழைத்து வந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதி இல்லாமல் பயத்துடன் சாமியை தரிசிக்கின்றனர்.

கோவில் நிர்வாகத்திடம் குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை முறையிட்டும் நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்று பக்தர்கள் புலம்புகின்றனர்.

இந்த சம்பவத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்