போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு

புதுக்கோட்டை அருகே போலீஸ் இன்ஸ் பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-27 23:00 GMT
நார்த்தாமலை,

புதுக்கோட்டை அருகே உள்ள கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரியலூர் மாவட்டம் கீழப்பழுர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சுப்பையாவின் குடும்பத்தினர் நேற்று முன்தினம், பொன்னமராவதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றனர். பின்னர் நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பு அவர்கள் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பையாவின் குடும்பத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கநகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சுப்பையாவின் வீட்டில் நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதில் திருட்டுபோன தங்கநகை, வெள்ளி பொருட்களின் விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே நகை- பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்