மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது

வளசரவாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-27 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீட்டின் வெளியே நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாகவும், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் மோட்டார்சைக்கிளில் வரும் மர்மநபர்கள் செல்போனை பறித்து செல்வது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், விருகம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ்(வயது 21) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள 14 முதல் 16 வயதுடைய சிறுவர்கள் 6 பேரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு வளசரவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டின் வெளியே நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடிக்கொண்டு அதில் சென்று தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

வளசரவாக்கம், வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதேபோல் மோட்டார் சைக்கிள்களை திருடி, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து செல்வராஜ் மற்றும் 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான செல்வராஜ் புழல் சிறையிலும், சிறுவர்கள் 6 பேரையும் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்