இன்றைய நவீன விஞ்ஞான உலகில் செயற்கைகோள்களின் பங்கு மிகவும் முக்கியமானது இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு

இன்றைய நவீன விஞ்ஞான உலகில் செயற்கைகோள்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

Update: 2018-01-27 21:30 GMT

பணகுடி,

இன்றைய நவீன விஞ்ஞான உலகில் செயற்கைகோள்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

பள்ளிக்கு புதிய கட்டிடங்கள்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.86 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பணகுடி, காவல்கிணறு, திருக்குறுங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இஸ்ரோ தலைவர் திறந்துவைத்தார்

விழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ‘ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்தார். மேலும் பணகுடி, காவல்கிணறு, திருக்குறுங்குடி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் சிவன் பேசுகையில், ‘கிராம பள்ளிகளுக்கு இஸ்ரோ பல உதவிகளை செய்ய தயாராக உள்ளது. அதற்கு முன்உதாரணம்தான் காவல்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.86 லட்சம் வழங்கப்பட்டது. இன்றைய நவீன விஞ்ஞான உலகில் செயற்கைகோள்களின் பங்கு மிகவும் முக்கியமானது. விண்ணில் ஏவப்படும் ஒவ்வொரு செயற்கைகோள்களும் மக்களின் நலனுக்காக ஏவப்படுகிறது. ஒரு செயற்கைகோள் செயல்படவில்லை என்றால் இணையதளம், டி.வி. எதுவும் செயல்படாது. விண்வெளியில் இந்தியா இன்னும் பல சாதனைகள் படைக்க உள்ளது’ என்றார்.

விழாவில் காவல்கிணறு பங்குதந்தை மைக்கிள்மிகிழன், காமராஜர் காய்கனி மார்க்கெட் சங்க தலைவர் மாம்பழசுயம்பு, காவல்கிணறு ரெயில்வே வளர்ச்சி குழு பொருளாளர் ராமராஜா, காவல்கிணறு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன், வட்டார நுகர்வோர் இயக்க தலைவர் பலவேசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆசிரியை மெரிரோமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக காவல்கிணறு பொதுமக்கள் சார்பில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்