தற்கொலை நாடகம் விபரீதமானது வி‌ஷம் தின்றதாக கூறியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

மானூரில் அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்த ஆட்டோ டிரைவர், உண்மையிலேயே வி‌ஷம் தின்றதாக கூறியும் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-01-27 20:30 GMT

மானூர்,

மானூரில் அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்த ஆட்டோ டிரைவர், உண்மையிலேயே வி‌ஷம் தின்றதாக கூறியும் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தற்கொலை நாடகம் விபரீதமானது.

ஆட்டோ டிரைவர்

நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 42). அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவருடைய மனைவி லதா (40). சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பழனி கற்பகம் என்ற மகள் உள்ளார். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் சுடலைக்கண்ணுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுச் செலவுக்கும் சரிவர பணம் கொடுக்காமல் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். உடனே சுடலைக்கண்ணு, எனக்கு வாழப் பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மிரட்டல் விடுத்து வந்தாராம்.

வி‌ஷம் தின்றார்

வழக்கம் போல நேற்று முன்தினமும் சுடலைக்கண்ணு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கூறியதோடு, தான் எலி மருந்தை தின்று விட்டதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். உடனே உறவினர்கள் உதவியுடன், அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

ஆனால் சுடலைக்கண்ணு, சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் டாக்டர்களிடமும் தகராறு செய்துள்ளார். எனவே அவர் எலி மருந்தை சாப்பிடாமலேயே எலி மருந்தை தின்றதாக நாடகமாடுகிறார் என நினைத்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இரவு 10.30 மணி அளவில் அவரது உடல் நிலை மோசமானது.

பரிதாப சாவு

எனவே மீண்டும் சுடலைக்கண்ணுவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுடலைக்கண்ணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்