தெருநாய்களை காக்கும் தேவதை!

மராட்டிய மாநிலம் மகாபலேஸ்வரில் இயற்கை அரசியின் மடியில் பிறந்தவர், ஆயிஷா காண்டி. அதனால்தான் இவர் ஒரு விலங்கு நேசராக வளர்ந்திருக்கிறார்.;

Update: 2018-01-27 07:37 GMT
ற்போது புனேயில் வசிக்கும் ஆயிஷா, தெருநாய்களைத் தேடி உணவளிக்கிறார், காயமுற்ற நாய்களுக்கு மருந்திட்டுக் குணப்படுத்துகிறார், தடுப்பூசி போடச் செய்கிறார்.

தெருவில் இறங்கி நடந்தாலே பாசமான நாய்களால் சூழப்படும் ஆயிஷாவுக்குப் பிடித்த இன்னொரு விஷயம், பயணம்.

முதலில் மும்பையிலும், பிறகு பெல்ஜியத்திலும் பணி புரிந்திருக்கிற ஆயிஷா, கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

பெல்ஜியத்தில் இருந்து இந்தியா திரும்பியதும் இவர் ஒரு விலங்கு நல நிறுவனத்தில் இணைந்து வேலை செய்திருக்கிறார். அப்போது, ஒன்றரை ஆண்டு காலத்தில் 160 பாதிக்கப்பட்ட தெருநாய்களுக்குச் சிகிச்சை அளித்து மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். தனியாகவே இப்பணியில் ஈடுபட நினைத்த ஆயிஷாவுக்கு, பணமும் நேரமும் தடையாக இருந்திருக்கின்றன.

“வித்தியாசமான வேலையில் ஈடுபட்டால்தான் நம்மால் நமக்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்ந்தேன். அதன் அடிப்படையில், திடீரென்று, மனதுக்குத் தோன்றிய இடத்துக்குப் புறப்பட்டுவிடும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். இதன் மூலம், வித்தியாசமான பயண மனோபாவம் கொண்டவர்களுக்கு உதவ முடிவதுடன், தெருநாய்களைக் காப்பது போன்ற எனக்குப் பிடித்தமான பணிகளுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது” என்கிறார், ஆயிஷா.

இவரது நிறுவனத்தின் மூலம், வித்தியாசமான சுற்றுலா இடங்களுக்கு, திடீர்ப் பயணம் மேற்கொள்ளலாம். ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு என்று உலகெங்கும் அந்த இடங்கள் அமைந்திருக்கின்றன.

“உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் இசைத் திருவிழாக்கள், பெரிய அல்லது வித்தியாசமான நிகழ்வுகள், சாகச நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒட்டி நாங்கள் பயணங்களை ஏற்பாடு செய்கிறோம். தவிர, அவரவர் தேவைக்கு ஏற்பவும் பயணங்களை அமைத்துக் கொடுக்கிறோம். புதிய அனுபவங்களை நாடுவோர், புதிய இடங்களைத் தேடுவோர் எங்களின் பிரதான இலக்கு” என்று விளக்குகிறார், ஆயிஷா.

தனது நிறுவனத்தை மேலும் பெரிதாக வளர்த்தெடுக்க வேண்டும், அதன் மூலம், தெருநாய்களைக் காக்க இன்னும் அதிக நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கும் வகையில் வசதிபெற வேண்டும் என்பது ஆயிஷா காண்டியின் கனவு.

மேலும் செய்திகள்