அலங்கியம் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அலங்கியம் அருகே குடிநீர் வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அலங்கியம், ஜன.27-
தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அலங்கியம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலசுப்பிரமணி நகரில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாயத்து சார்பில், ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் தொட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பெற்று வந்தனர். இதனால் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் போனது.
இந்த காரணத்தினால் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உடைந்த தண்ணீர் தொட்டிகளை சரி செய்ய வேண்டும். குடிநீர் வினியோகத்தை தொடர்ந்து சரியாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாராபுரம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மதியம் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.