நெல்லையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

நெல்லையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். சென்னைக்கு வேலைக்கு சென்றபோது இந்த துயரம் நடந்தது.

Update: 2018-01-27 00:03 GMT
நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே பாலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் உடல் கிடந்தது. உடல் சிதறி கால்கள் சிதைந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். சிதைந்த நிலையில் கிடந்த உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த நபரின் சட்டைப்பையில் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் குமரி மாவட்டம் பாலவிளையை சேர்ந்த தங்கையன் மகன் பிவின் (வயது 34) என்பதும், இவர் சென்னைக்கு கூலிவேலைக்கு சென்றதும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் வந்துள்ளார். முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் வந்த அவர், கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டு பகுதியில் உட்கார்ந்துள்ளார். அப்போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்