போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்பனை; 2 பேர் கைது

பெங்களூருவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-01-26 22:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்கும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், மகாலட்சுமிபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு சென்று, அந்த கல்வி நிறுவனத்திற்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு பல்கலைக்கழகங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகள் பெயரில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக போலியாக தயாரித்து வைத்திருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கல்வி நிறுவனத்தை நடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் பெயர் சீனிவாசரெட்டி, சுனில்குமார் என்று தெரிந்தது.

இவர்கள் 2 பேரும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து வந்துள்ளனர். இதுதவிர எந்த விதமான தேர்வும் எழுதாமல் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து முடித்தவர்களுக்கு பி.எஸ்சி., பி.காம் படிப்புகளுக்கான சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து கொடுத்து சீனிவாசரெட்டி, சுனில்குமார் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அவர்களது கல்வி நிறுவனத்தில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ்களும், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள், ஆவணங்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சீனிவாசரெட்டி, சுனில்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் 2 பேர் மீதும் மகாலட்சுமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்