பஸ் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சியில் நூதன போராட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் ஏறி அமர்ந்து புதிய கட்டணத்தை கொடுக்க மறுத்தனர்.

Update: 2018-01-26 22:30 GMT
திருச்சி,

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசியல் கட்சிகள், நுகர்வோர் அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று பகல் திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து கொண்டு இருந்தனர். இது பற்றி அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று, அனுமதியின்றி இதுபோன்ற துண்டு பிரசுரங்களை வினியோகிக்க கூடாது என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர்களில் ஒரு சிலர் திடீரென அந்த வழியாக சத்திரம் பஸ் நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் கண்டக்டரிடம் புதிய கட்டணத்தை கொடுக்க மாட்டோம் என்றும், பழைய கட்டணத்தையே கொடுப்போம் என்றும் கூறினர். அப்போது அவர்கள் கோரிக்கை வாசகம் பொறித்த பதாகையை அணிந்து இருந்தனர். இது தொடர்பாக பஸ்சில் இருந்த பயணிகளிடமும் எடுத்துரைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று பஸ்சில் இருந்த மக்கள் அதிகாரம் அமைப்பினரை கீழே இறக்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்