பொம்மிடி அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை

பொம்மிடி அருகே லாரி டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாலத்திற்கு அடியில் உடல் வீசப்பட்டு இருந்தது.

Update: 2018-01-26 22:15 GMT
பொம்மிடி,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பழக்காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது41), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், பூவரசன் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மோகன், மனைவியிடம் லாரிக்கு சென்ற வகையில் வரவேண்டிய சம்பள பணத்தை தர்மபுரி அருகே உள்ள எருமப்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் கோவிந்தராஜிடம் வாங்கி வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை பொம்மிடி அருகே உள்ள வே.முத்தம்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் வழியாக அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளியில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு சென்றனர். அப்போது ரெயில் தண்டவாளத்தில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் இதுகுறித்து கிராமமக்களிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது ரெயில்வே பாலத்திற்கு அடியில் ஆண் ஒருவர் உடல் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் மற்றும் பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பிணமாக கிடந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை எடுத்து பார்த்தனர்.

அப்போது அவர் லாரி டிரைவர் மோகன் என்பதும், அவரது உடலில் 26 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் மோகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து உடலை பாலத்திற்கு அடியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் ஆய்வு மற்றும் சோதனை செய்தனர். மோப்ப நாய் பாலத்திற்கு அடியில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு அங்கேயே நின்று விட்டது.

இதையடுத்து போலீசார் மோகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் பதறியடித்துக்கொண்டு வந்து மோகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் மோகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். லாரி டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்