பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்னேரியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகியும், வக்கீலுமான ராஜா தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஊடகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது உயர்த்தப்பட்டு உள்ள பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள்டேனியல், மாவட்ட இணைசெயலாளர் மணிகண்டன், வட்ட செயலாளர் பாண்டுரங்கன், சங்கிலிரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.