தனியார் கூரியர் நிறுவன அதிகாரி பலி
கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் கூரியர் நிறுவன அதிகாரி பலியானர்.;
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் இரட்டை மலை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). இவர், தனியார் கூரியர் தபால் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை இவர், திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தை தாண்டி மணலி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருந்து வந்த கன்டெய்னர் லாரி, கருப்பையா சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் கருப்பையா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.