பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்பட்ட பாதிப்பால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி பெற்றுத்தர வேண்டும்

பருத்தி செடிகளுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதிஉதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2018-01-25 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கி, விவசாய சங்க பிரதிநிதிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணை செயலாளர் பிச்சைபிள்ளை பேசுகையில், புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தில் திருமானூர் ஒன்றியத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளனர். காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. எனவே புள்ளம்பாடி வாய்க்காலில் விடப்படும் தண்ணீரை நிறுத்தாமல் பிப்ரவரி மாதம் முழுவதும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையில்லாமல் பயிர்க்கடன் வழங்க வேண்டும். பயிர்காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது...

அரியலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வாரணவாசி ராஜேந்திரன் பேசுகையில், கரும்புக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையை தனியார் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உடனடியாக வழங்க வேண்டும். நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டோம். பருத்தி செடிகளுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன்காரணமாக அரியலூர் மாவட்டத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டரிடம் அதற்கான ஆதாரங்களுடன் நிதிஉதவி கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு நிதிஉதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதிகாரிகள்

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், இணை இயக்குனர் (வேளாண்மை) அய்யாசாமி, இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) தயாளன், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு துறை) நசீர், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் அம்பேத்கர் விவசாயிகள் இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்