பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பா.ம.க.-வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி- வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-25 22:45 GMT
திருச்சி,

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நேற்று 4-வது நாளாக போராட்டம் நடந்தது. அதன்படி நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொது செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணை தலைவர் உமாநாத், மாவட்ட அமைப்பு தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் வரவேற்றுப்பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாசல் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில பொது செயலாளர் ஹரிகரன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முருகராஜன், மாவட்ட தலைவர் தங்கம் ரத்தினகுமார், அவைத்தலைவர் கந்தன், அமைப்பாளர் அழகு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்