திருச்சியில் 50 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை இன்று முதல் பயன்படுத்தக்கூடாது

திருச்சியில் 50 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை இன்று முதல் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-01-25 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சி மற்றும் யுகா பெண்கள் அமைப்பு இணைந்து தூய்மை திருச்சியாக மாற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பொது மக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடந்தது. இதற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் யுகா பெண்கள் அமைப்பு அல்லிராணி பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி பொது மக்கள், வணிகர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை வழங்கி பேசியதாவது:-

50 மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை 26-ந்தேதிக்கு(இன்று) பிறகு பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்வச் பாரத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 404 கிராம ஊராட்சிகளில் கழிப்பறை முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திடக் கழிவு மேலாண்மையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில், அன்றாடம் சேரக்கூடிய மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிரித்து வழங்கியதில், இதுவரை 5 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரித்து, 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த தொகையை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், நம் மாநகரம் இந்தாண்டில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அமுதவல்லி, உதவி ஆணையர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்