ரவுடி சேட்டு கொலை வழக்கில் தேடப்பட்ட பிரபல ரவுடி கொறகோபி தர்மபுரி கோர்ட்டில் சரண்

ஓசூரை சேர்ந்த ரவுடி சேட்டு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி கொறகோபி தர்மபுரி கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.

Update: 2018-01-25 23:00 GMT
தர்மபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் சேட்டு என்கிற பிரேம்நவாஸ் (வயது 36). ரவுடியான இவர் மீது சில வழக்குகள் உள்ளன. ஓசூர் ராம் நகரில் இவர் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் சேட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் கடந்த 14-ந்தேதி ஓசூர் அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளி என்ற இடத்தில் சேட்டுவின் தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கொலை செய்யப்பட்ட சேட்டுவுக்கும், ஓசூரை சேர்ந்த ரவுடியான கோபி என்கிற கொறகோபி (47)க்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் சேட்டு கொலையில் கொற கோபிக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதைதொடர்ந்து தலைமறைவான கொறகோபி மற்றும் அவருடைய கூட்டா ளிகள் 6 பேரை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப் பட்டன. தனிப்படை போலீசார் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங் களுக்கு சென்று கொலை யாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிரபல ரவுடி கொறகோபி தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் நேற்று சரணடைந்தார். அவரிடம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அல்லி விசாரணை நடத்தி னார். பின்னர் கொற கோபியை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் அட்கோ போலீசார் கொற கோபியை கைது செய்து சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

சேட்டு கொலை வழக்கில் சரணடைந்த கொறகோபி ஓசூர் பகுதியில் மிகவும் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சேட்டு கொலை தொடர்பாக கொறகோபியை போலீஸ் காவலில் எடுத்து விரிவாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவ்வாறு விசாரணை நடத்தும்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் செய்திகள்