தேர்தலை நேர்மையாக நடத்திட இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும்

தேர்தலை நேர்மையாக நடத்திட இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய வாக்காளர் தின கருத்தரங்கில் கலெக்டர் ராமன் பேசினார்.

Update: 2018-01-25 23:00 GMT
வேலூர்,

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வேலூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நேருயுவகேந்திரா சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. அண்ணா கலையரங்கம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கோட்டை, மக்கான் வழியாக சென்று நகர அரங்கை அடைந்தது. அங்கு கருத்தரங்கு நடைபெற்றது.

உதவி கலெக்டர் செல்வராஜ் வரவேற்றார். நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் விஜயாராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பாலாஜி, செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்தர்நாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கலெக்டர் ராமன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசியதாவது:-

1950-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அந்தநாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நமது ஜனநாயக கடமைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. இளம் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளை தெரிந்து கொண்டு அரசியலில் பங்குபெற வேண்டும்.

இதற்காக பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் எழுத்தறிவு சங்கம் தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 28 கல்லூரிகளில் தேர்தல் எழுத்தறிவு சங்கம் தொடங்கப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அதே போன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க இதுவரை 53 மேல்நிலை பள்ளிகளில் தேர்தல் எழுத்தறிவு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களிலும் இந்த சங்கம் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 1-1-2000 அன்று பிறந்தவர்கள் 53 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மில்லினியம் வாக்காளர்களாக உள்ளனர். மேலும் 18 முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்கள் 42,873 பேர் உள்ளனர். தற்போது இளம் தலைமுறை வாக்காளர்களை பதிவு செய்யும் பணி ஸ்மார்ட்போன் மூலம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் வந்துவிட்டால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது வாடிக்கையாகிவிட்டது. இது தவறான நடைமுறையாகும். ஆனால் இதை கலாசாரமாக்கிவிட்டனர். இதை வேரறுக்கவேண்டும். பக்கத்து மாநிலத்தினர் நம்மை இழிவாக பார்க்கிறார்கள். நம் மீதுள்ள இந்த இழிசெயலை அகற்றவேண்டும். இதற்கு தேர்தலை நேர்மையாக நடத்திட இளம்வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்