ஓட்டலில் திடீர் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கண்ணமங்கலத்தில் ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.;

Update: 2018-01-25 22:45 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் ஒரு சைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீவிபத்து குறித்து ஓட்டல் உரிமையாளர் முரளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வேலூர் மற்றும் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஓட்டல் சமையலறையில் இருந்த பொருட்கள், டைனிங் ஹால், கேஷ் கவுண்ட்டர், பிரிட்ஜ் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அருகருகே உள்ள கடைகளுக்கு தீ விபத்து பரவாமல் தடுக்கப்பட்டது என பொதுமக்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்