பஸ் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு

பஸ்கட்டண உயர்வு குறித்து தஞ்சையில், மாதர் சங்கத்தினர் பொதுமக்களிடம் வாக்குசேகரித்ததுடன், கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.

Update: 2018-01-25 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. நகர செயலாளர் வசந்தி முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களை வாட்டி வதைக்கும் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின்போது அங்கு 2 அட்டைப்பெட்டிகள் வைத்திருந்தனர். அதில் ஒரு பெட்டியில், பஸ் கட்டண உயர்வை ஆதரிக்கிறோம் என்றும், மற்றொரு பெட்டியில் பஸ் கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் எழுதி வைத்திருந்தனர். அங்கு வந்த பொதுமக்களிடம் துண்டு சீட்டை கொடுத்து அதில் பஸ் கட்டண உயர்வு குறித்து தங்களது கருத்துக்களை எழுதி உரிய பெட்டியில் போடுமாறு கூறினர்.

இதையடுத்து பஸ் நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் ஏராளமானோர் அந்த துண்டு சீட்டில் தங்களது கருத்துக்களை எழுதி வாக்குப்பெட்டியில் போட்டனர். இதேபோல் பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்துக்களையும் பெற்றனர். 

மேலும் செய்திகள்