பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசு ஊழியர்கள் - பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசு ஊழியர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-25 22:30 GMT
நாகப்பட்டினம்,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர் தமிழ்வாணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட இணை செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

கீழையூர்

அதேபோல பஸ் கட்டண உயர்வை கண்டித்து, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு புதுக்கடைத்தெருவில் கீழையூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். கீழையூர் ஒன்றிய தலைவர் குமார், மாவட்ட செயலாளர் குமரன், மாவட்ட துணை தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை கோட்ட பொறுப்பாளர்கள் வரதராஜன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்