ஈரோடு-கோபியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு, கோபியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-01-25 22:00 GMT
ஈரோடு,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தல், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சென்னிமலைரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வாசகம் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:-

நாங்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து கல்லூரிகளுக்கு வந்து படிக்கிறோம். தினமும் பஸ்களில் வந்து செல்கிறோம். எங்களது பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று படிக்க வைப்பதால் அவர்கள் கல்வி கட்டணத்தையே செலுத்த சிரமப்படுகிறார்கள்.

இந்தநிலையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கூடுதல் சுமையாக உள்ளது. எங்களால் அதிக கட்டணத்தை கொடுத்து பஸ்சில் செல்லவும் முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே பஸ் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாணவர்களின் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டார்கள். நேற்று காலை 10 மணிஅளவில் கோபி கலை அறிவியல் கல்லூரி முன்பு இருந்து மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டார்கள்.

அப்போது அவர்கள் போலீசார் ரோட்டின் நடுவில் வைத்திருந்த தடுப்பு கட்டைகளை தள்ளிவிட்டு சாலை மறியலில் கலந்து கொள்ள சென்றார்கள். ஆனால் போலீசார் மாணவ, மாணவிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஈரோடு-சத்தி மெயின்ரோட்டிலேயே உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த மறியலில் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அவர்கள், ‘கடந்த வாரம் பஸ் ஓட்ட ஆளில்லை. இந்த வாரம் பஸ்சில் போக ஆளில்லை’. உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய அட்டைகளை வைத்திருந்தார்கள். மேலும் அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஒ. கோவிந்தராஜ், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளிசுந்தரம், தர்மலிங்கம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள், ‘பஸ் கட்டண உயர்வால் மிகவும் வேதனைப்படுகிறோம். எங்கள் தாய், தந்தையால் அவ்வுளவு கட்டணம் செலுத்த முடியவில்லை. எனவே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.’ என்று எழுதப்பட்டு இருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், ‘இதுகுறித்து அரசிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு மதியம் 1.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ-மாணவிகளின் 3-வது நாள் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்