மின்சார திருட்டில் ஈடுபட்ட 12 பேர் கைது
அண்டாப்ஹில்லில் மின்சார திருட்டில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
மும்பை அண்டாப்ஹில் பகுதியில் மின்திருட்டில் பலர் ஈடுபடுவதாக பெஸ்ட் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது, அங்கு செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை நிறுவனங்கள், வீடுகளில் திருட்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
இதன் மூலம் பெஸ்ட் நிர்வாகத்துக்கு ரூ.40 லட்சம் வரை இழப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக திருட்டு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இது தொடர்பாக பெஸ்ட் அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்திருட்டில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.