அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

அரசு மக்கள் நலனில் அக்கறையில்லாமல் உள்ளது என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

Update: 2018-01-25 22:30 GMT
கோவை,

தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய கீதத்திற்கு விஜேயந்திரர் எழுந்து நிற்க வலிமை இருந்து இருக்கிறது. ஆனால் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கும்போது அவருக்கு எழுந்து நிற்க மனமும் இல்லை, வலிமையும் இல்லை. தமிழுக்கு அவர் கொடுக்கின்ற மரியாதை அவ்வளவு தான்.

பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் யார் போராடினாலும் அ.தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை. மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. இருக்கும் சிறிது காலம் அனைத்தையும் சுருட்டி விட்டு போகலாம் என்று நினைக்கிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சியினர் நினைத்த நேரத்தில் நினைத்தை பேசுவார்கள். தமிழகத்தில் பாரதீய ஜனதா செயல்பட்டால் தானே நாம் ஏதும் கூற முடியும். அவர்கள் செயல்படுகின்ற நிலையில் இல்லை. அரசியல், சினிமாவைவிட அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது போல நினைக்கிறார்கள்.

ரஜினி, கமல் அரசியலுக்கு வந்த பின் மக்களிடத்தில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பொறுத்து இருந்து பார்த்துதான் பதில் சொல்ல முடியும். கமல்ஹாசன் இன்னும் முழு அரசியல்வாதியாக பிரவேசிக்கவில்லை. உதயநிதி அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்