பஸ் கட்டண உயர்வை கண்டித்து பள்ளத்தூரில் 2-வது நாளாக மாணவிகள் போராட்டம்

பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள சீதாலட்சுமி ஆச்சி கல்லூரி மாணவிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-25 22:15 GMT
காரைக்குடி,

பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19-ந்தேதி அறிவித்தது. அதன்படி 20-ந்தேதி முதல் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது. திடீர் பஸ் கட்டண உயர்வால் பெரும்பாலான மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பஸ் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களும், சில அமைப்பினரும் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அதனை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக சில கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று முன்தினம் கல்லூரி வாயில் முன்பு சாலையோரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று 2-வது நாளாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, பள்ளத்தூர் பஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளத்தூர் போலீசார் முற்றுகை போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்று, மீண்டும் கல்லூரிக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல் செட்டிநாடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்புவனம் சந்தை திடலில் ஜல்லிக்கட்டு பேரவை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் சேங்கைமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தண்டியப்பன், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்