மண்டபம் யூனியன் பகுதியில் திட்டப்பணிகளை ஊராட்சி செயலர்கள் தாமதமின்றி செய்து முடிக்க வேண்டும், அதிகாரிகள் வலியுறுத்தல்

மண்டபம் யூனியன் பகுதியில் திட்டப்பணிகளை ஊராட்சி செயலர்கள் தாமதமின்றி செய்து முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.;

Update: 2018-01-25 22:00 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் 28 ஊராட்சிகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை ஆலோசனையின்படி உச்சிப்புளியில் உள்ள மண்டபம் யூனியன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆணையாளர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். அலுவலக மேலாளர்கள் செந்தாமரை செல்வி, ராஜேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலக உதவி பொறியாளர்கள் ஹேமா, ராஜேந்திரன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், ஜெகநாதன், ஆரோக்கியமேரி, தில்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆணையாளர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் பேசியதாவது:- அரசு அறிவிக்கும் திட்டப்பணிகளை உடனுக்குடன் மக்கள் பயன்பெறும் வகையில் தாமதமின்றி செய்து முடிக்க வேண்டும். தற்போது கட்டப்பட்டு வரும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடுகள் போன்றவற்றின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் புதிய தெருவிளக்குகளுக்கு எல்.இ.டி. பல்புகள் பொருத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க உடனுக்குடன் குப்பைகளை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டி 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாக மாற்ற போதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். 

மேலும் செய்திகள்