‘பஸ் கட்டணத்தை குறைக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்’ - டாக்டர் ராமதாஸ் பேச்சு

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Update: 2018-01-25 23:00 GMT
விழுப்புரம்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு, ஏழை மக்கள் தாங்க முடியாத அளவிற்கு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 100 மடங்கு கட்டணத்தை ஏற்றியிருப்பது இதுவரை வரலாற்றிலேயே கிடையாது. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் ரூ.35 கட்டணம், ஆனால் பஸ்சில் ரூ.155. வண்டலூரில் இருந்து சென்னை செல்ல 33 ரூபாய் பஸ் கட்டணம். வண்டலூரில் குடியிருக்கும் ஒரு ஏழை தொழிலாளி மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவான் என்றால் அந்த தொழிலாளி பஸ்சிற்கே ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டியுள்ளது. மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை வைத்து அவர் அரிசி வாங்குவாரா? வீட்டு வாடகை கொடுப்பாரா? இதையெல்லாம் அரசு நினைத்து பார்க்க வேண்டும்.

தமிழக அரசுக்கு நேரடி கடனாக ரூ.3.14 லட்சம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக ரூ.2½ லட்சம் கோடியும் கடன் உள்ளது. ஆக மொத்தம் 5¾ லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். தமிழக அரசு பட்ஜெட் போடும்போது நமது ஒவ்வொருவரின் தலையையும் அடகு வைத்து கடன் வாங்குகின்றனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு காரணம் அரசின் நிர்வாக திறமையின்மைதான். தமிழகத்தில் 22 ஆயிரத்து 500 பஸ்கள் ஓடுகிறது. இதற்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் என வெறும் 85 ஆயிரம் பேர் மட்டுமே தேவை. ஆனால் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் உள்ளனர். வருடந்தோறும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு ஆட்கள் எடுக்கிறோம் என்று ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வாங்குகிறார்கள். இப்போது இருக்கிற பஸ்களில் பாதி பஸ்கள் காயலாங்கடைக்கு போடும் நிலையில் தான் உள்ளது. இந்த பஸ்களை நமது டிரைவர்கள் சாமர்த்தியமாக ஓட்டுகிறார்கள். உண்மையிலேயே அந்த டிரைவர்களை நாம் பாராட்ட வேண்டும்.

நிர்வாக சீர்கேடு, லஞ்சம், ஊழல் இவற்றையெல்லாம் கொண்டு வந்து கிராமப்புற ஏழை, எளிய மக்கள் மீது சுமத்துகிறார்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பஸ் கட்டணத்தை குறைப்போம் என்று கடந்த தேர்தலிலே சொன்னோம். ஆனால் 200, 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டீர்கள். இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

இன்றைக்கு போக்குவரத்து துறை 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். வட்டி மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் கட்டி வருகிறார்கள். மின்சார துறைக்கு எப்படி ஏற்றுக்கொண்டார்களோ அதுபோல் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடே ஊழலில் மூழ்கி போயிருக்கிறது. இதை மாற்றும் சக்தி பெண்களிடம்தான் இருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு ஏறியுள்ளது. விவசாயிகள் வாழ முடியாத நிலையில் உள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு 3, 4 வருடங்களாக ஆலை நிர்வாகம் பணம் கொடுப்பதில்லை. இதற்காக பா.ம.க. பல போராட்டம் நடத்தியும் பினாமி அரசு கண்டுகொள்ளவில்லை.

தனியார் பஸ்கள் ஏதேனும் நஷ்டத்தில் ஓடுகிறதா? இல்லை. காரணம் அவர்கள் நிர்வாகத்தை நல்ல முறையில் செய்கிறார்கள். தனியாரிடம் 100 பஸ்களை கொடுத்து பாருங்கள், நன்றாக இயக்குவார்கள். நிர்வாகத்தை சரிசெய்ய திறமையுள்ள நல்லாட்சி வேண்டும். அதற்கு பா.ம.க. ஆட்சி அமைய வேண்டும். அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சரானால் பூரண மதுவிலக்கிற்குதான் முதல் கையெழுத்து போடுவார்.

பஸ் கட்டணத்தை உடனே வாபஸ் பெறுங்கள். பஸ் கட்டணத்தை குறைக்க முடியவில்லை என்றால் முன்பிருந்த கட்டணத்தை போலாவது கொண்டு வாருங்கள். இல்லையெனில் ராஜினாமா செய்யுங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். 

மேலும் செய்திகள்