பணகுடி அருகே விவசாயியை குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

பணகுடி அருகே விவசாயியை குத்திக்கொலை செய்த வாலிபருக்கு நெல்லை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2018-01-25 20:30 GMT
நெல்லை,

பணகுடி அருகே விவசாயியை குத்திக்கொலை செய்த வாலிபருக்கு நெல்லை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்விரோதம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதி மதகநேரி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த நாராயணன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 34), விவசாயி. இவரது வீட்டில் ரூ.10 ஆயிரம் மற்றும் கைக்கெடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

இதுதொடர்பாக நடந்த ஊர்க்கூட்டத்தில், அதே ஊர் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் டேவிட் (32) என்பவர் திருடியதாக கூறப்பட்டது. தன் மீது திருட்டு பழி சுமத்தியதால் டேவிட் ஆத்திரம் அடைந்தார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து, அதாவது 5.3.2012 அன்று பாலகிருஷ்ணன் மதகநேரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த டேவிட், பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார், டேவிட்டை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்