தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களும் வாக்காளர்களாக சேர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில், தகுதியுள்ள அனைத்து இளைஞர்களும் வாக்காளர்களாக சேர வேண்டும், என கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2018-01-25 21:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், தகுதியுள்ள அனைத்து இளைஞர்களும் வாக்காளர்களாக சேர வேண்டும், என கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

வாக்காளர் தினவிழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசும், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

100 சதவீதம் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஒவியப்போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினவிழா நடந்து வருகிறது. நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது. எனவே, தகுதியுள்ள அனைத்து இளைஞர்களும், தங்களை வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து வாக்காளர்களும் வருகிற தேர்தலில் தவறாமல் வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்து, மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், தாசில்தார் ராமச்சந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாள் தேவராஜ் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்