நெல்லையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்–போக்குவரத்து பாதிப்பு

நெல்லையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2018-01-25 21:30 GMT

நெல்லை,

நெல்லையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 527 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியில் கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு தொ.மு.க. அமைப்பு செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் முருகேசன், சுடலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த மறியலில் பங்கேற்றவர்கள், பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்தம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை உருவாக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பி, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, பெண் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரமுடியாமலும், மற்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமலும் முடங்கின.

527 பேர் கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் காசிவிசுவநாதன், சுப்பிரமணியன், கணேசன், சடையப்பன், தென்கரை மகராஜன் உள்பட 123 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாவட்டத்தில் உள்ள அம்பை, சிவகிரி, ஆலங்குளம், வள்ளியூர், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 6 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 404 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 527 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் செய்திகள்