குடியரசு தினத்தைக் கொண்டாடுவோம்!

சுதத்திர தினத்தைப் போலவே குடியரசு தினமும் போற்றி கொண்டாடத்தக்கது. சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்களா?

Update: 2018-01-25 09:32 GMT
குடியரசு தினம் ஏன் ஜனவரி 26–ல் கொண்டாடப்படுகிறது, குடியரசு தினத்தின் பெருமை என்ன? ஒரு இந்தியனாக குடியரசு தினம் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது என்ன?

* சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்தபோது, 1930–ம் ஆண்டு ஜனவரி 26–ந் தேதியை, ‘இந்திய சுதந்தரதினமாக கொண்டாடுவது’ என்று முடிவெடுக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் விமரிசையாக விழா எடுக்கப்பட்டது. இது தீவிரமான சுதந்திர எழுச்சியை உருவாக்கி, விடுதலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* 1947–ம் ஆண்டு, ஆகஸ்ட் 15–ம் தேதி, வெள்ளையர்கள் வெளியேறி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்பு, ஜனவரி 26–ந் தேதியை வரலாற்றில் நினைவுகூரும் வகையில்  குடியரசு தினமாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 1950–ம் ஆண்டு முதல், ஜனவரி 26 குடியரசு தினமாக ஏற்கப்பட்டு முதன் முதலில் கொண்டாடப்பட்டது.

* சுதந்திர தினம் அடிமைத்தளையில் இருந்து விடுபட்ட நாளாகும். குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியிலான ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும். நமது நாட்டிற்கான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950, ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

*  ஆரம்பத்தில் குடியரசு தினம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.

* குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955–ல் தான் முதன் முதலில் நடந்தது. ராஜ்பாத் என்ற இடத்தில் இந்த முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

* அந்தக் காலத்தில் குடியரசு தினம் கொண்டாடும்போது, ‘அபைடு வித் மீ’ என்ற கிறிஸ்தவ ஆங்கிலப் பாடல் ராணுவ அணிவகுப்பின்போது பாடப்பட்டது. இது மகாத்மா காந்தியின் விருப்பமான பாடல்களில் ஒன்று என்பதால் அது அப்போது ஒலிபரப்பப்பட்டதாம்.

* இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆகும். இந்திய சட்டத்தில் 448 ஆர்டிகிள்கள் உள்ளன. இவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றுவது மிகச்சிரமமான பணிகளில் ஒன்றாகும். ஆனால் டாக்டர் அம்பேத்கார் 2 ஆண்டுகள் 11 மாத முயற்சியில் அரசியலமைப்புச் சட்டத்தை திறம்பட இயற்றித் தந்தார். அவரே இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படுகிறார்.

*  நமது அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள், பல்வேறு நாடுகளின் சிறந்த சட்டக்கூறுகளிலிருந்து பல அம்சங்களை எடுத்து கையாண்டுள்ளனர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துகள் பிரான்ஸ் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். ஐந்தாண்டுத் திட்டங்கள் ரஷியாவின் அரசியலமைப்பில் இருந்து பின்பற்றப்பட்டதாகும்.

* இந்திய குடியரசுக்கான தனிச்சட்ட திட்டங்கள் இயற்றும் முன்பு, பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசாங்கத்தின் சட்டமே, இந்திய சட்டமாக பின்பற்றப்பட்டது.

* பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா போன்ற முக்கியமான பல தேசிய விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்